Total Pageviews

Friday 27 April 2012

கல்4-2

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம்
வட்டம் நரசிங்க நல்லூர் எனும் ஊரில்
அமைந்த நடுகல் கல்வெட்டு (செங்.
நடு. 30 /1971) வட்டெழுத்தில்
பொறிக்கப்பட்டு உள்ளது. இது 6 ஆம்
நூற்றாண்டுக் காலத்தது.
கோவியைய
சிங்கவிண்ணபருமற்கு முப்பத்து /
மூன்றாவது கங்கதி அரைசரு மக்கர்
மேன் விண்ணன்னா / ர் சேவகந்
தொப்புரவருப்பாடி ஆ(ள்கி)ன்ற
பசிரப் / பண்ணன் குறட்டாதன் - - -
வரமு கொண்ட ஞான் / றெறிந் /
து பட்டா / ன் கந்த / பருபேன் /
னாதியார் / மகன் கல்
மக்கர் - மகன்; ஏனாதி - படைத்
தலைவருக்கு அரசன் வழங்கும்
ஒரு பட்டம்; அதிஅரைசன் - வேந்தன்
அல்லது அரசனுக்கும் சிறிய
நிலை வேள், எறிந்து - வெல்லப்பட்டு,
பட்டான் - வீர சாவடைந்தான்
பல்லவன் சிம்மவிஷ்ணுவின்
முப்பத்து மூன்றாவது (579 CE)
ஆட்சி ஆண்டில் அவனுக்கு அடங்கிய
கங்க மன்னன்
கங்கஅதி அரசனுக்கு 'மகன்'
நிலை அதிகாரப் பொறுப்பு பெற்ற
சிற்றரசனான மேன் விண்ணன்
என்பானுடைய
படைப்பிரிவு தலைவனும்
தொப்புரவருப்பாடி எனும்
நிலத்தை ஆளுகின்ற வேளுமான
வசிரப் பண்ணன் குறட்டாதன் என்பான்
தாக்கி வென்ற போது கந்தபருமன்
ஏனாதி என்ற படைத் தலைவனின்
மகன் அல்லது படைவீரன்
வீரசாவடைந்ததன் நினைவில்
நட்டுவித்த நடுகல்.
யகர சகர திரிபில் வயிர என்பது வசிர
என திரிந்து உள்ளது. குறு அட்ட
ஆதன் > குறட்டாதன் என புணர்ந்தது.
மேன் என்பது மிகப் பண்டைய தமிழ்ப்
பெயர். அன் ஈறு உடன்சேர மேனன்
என்று ஆகும். ஒரு எதியோபிய
மன்னன் பெயர் Menelik I 982-957 BCE
> மேன் எல்லிக(ன்). சில எகிபதிய
மன்னர்கள் மேன் என்ற பெயர்
கொண்டு இருந்தனர். Menkaure 2490 -
2472 BCE > மேன் காரி; Menkauhor
2422 - 2414 BCE > மேன் காக்கர்;
Menkamin I 2150 - 2135 BCE > மேன்
காமன்.
- - - -
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம்
வட்டம் கொட்டையூரில் அமைந்த
நடுகல் கல்வெட்டு (செங்.
நடு.62/1971) வட்டெழுத்தில்
பொறிக்கப்பட்டு உள்ளது. சிம்ம
விஷ்ணுவின் 6 ஆம்
நூற்றாண்டு காலத்ததாக
முடிபு கொள்ளப்பட்டுள்ளது.
சோமாசி கோ திருமானில்கு /
இருபத்தொன்றாவது மீகொன் /
றை நாட்டு பெருபுளிஊர் தொல்(தே) /
வரு சுட்ட ஞான்று மறு அதிரைச /
ரு சேவகன் கதவசாத்தன் பட்டான்
சுட்ட - ஊர் எரித்த; ஞான்று - பொழுது;
சேவகன் - அதிகார நிலைப் படைத்
தலைவன்; மறு - தடு, காவற்படுதல்
சிம்ம விஷ்ணு காலத்து நடுகல்லின்
உருவ அமைப்புடன்
ஒத்து இருப்பதால் இந் நடுகல் 6 ஆம்
நூற்றாண்டினதாக
முடிபு கொள்ளப்பட்டு உள்ளது.
தனிஆட்சி நடத்திய
சோமாசிகோ திருமான்
என்பானுக்கு இருபத்தொன்றாவது ஆட்சி ஆண்டில்
அவனுக்கு அடங்கிய மேல்
கொன்றை நாட்டு பெரும்புளியூர்
சிற்றரசன் தொல் தேவன்
படை எடுத்துத் வந்து ஊரை எரித்த
போது காவல் பொறுப்பில் இருந்த
அதிரைசன் என்னும் அதிகாரப்
பொறுப்புள்ள குறுநில மன்னனின்
படைத் தலைவன் கதவசாத்தன்
என்பான் போரில் ஈடுபட்டு வீர
சாவடைந்தான்.
தொல் தேவன் கொளுத்திய ஊரின்
பழம் பெயர் என்ன
என்று குறிக்கப்படவில்லை.
அது இன்றைய கொட்டையூராக
இருக்கலாம். சோமாசி கோ யார்
கட்டுப்பாட்டிலும் அடங்காத
தனி அரசன். சோமாசி என்பது சோ,
மாசி ஆகிய இரு பெயர்களின் ஒட்டுப்
பெயர். சோ என்பதும் கதவன்
என்பதும் சிந்து முத்திரைகளில்
காணப்படும் பழந்தமிழ்ப் பெயர்கள்.
ஒரு கொரிய மன்னன் பெயர் Soseong
(798–800) > சோ சேயன்; துருக்கியின்
ஒரு இலிடிய வேந்தன் பெயர் Croissos
575-546 BCE > குறு ஓய் சோ >
குறு ஓயன் சோ. ஒரு எதியோபிய
மன்னன் பெயர் Sofard 2345 - 2315 >
சோ பரத(ன்). இன்னொரு எதியோபிய
மன்னன் பெயர் Sousel Atozanis 2055-
2035 > சோ சேல்(அன்) அட்டசாணி.
தென்மெக்சிகோவில் ஒரு மாயப்பன்
அரசர் பெயர் .Cho Cocom 1352-1365
AD > சோ கக்கம்.
- - - -
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம்
வட்டம் தொரைப்பாடியில் அமைந்த
நடுகல் கல்வெட்டு (செங். நடு.
33/1971) வட்டெழுத்தில்
பொறிக்கப்பட்டு உள்ளது. இதன்
காலம் 6 ஆம் நூற்றாண்டு.
கோவிசைய மயேந்திர /
பருமற்கு (றண்ணு) ஆவது க /
ங்கரைசரோடு பவ்வது கங் /
கரைசரு மக்கள் பொன் /
னந்தியாரு பெருமுகை / எறிந்த
ஞான்று கங்க /
ரைசரு சேவகரு எறிந்து / ப
ட்டாரு ராராற்று ஆண்ட / குன்றக்
கண்ணியார் / கல்
பவ்வது - பரவிப் படர்ந்து, நிலம்
கவர்ந்து நாடு விரித்து; எறிந்து -
அழித்த, வென்று, கல் - நடுகல்
முதலாம் மகேந்திர வர்ம பல்லவனின்
இரண்டாம் ஆட்சி ஆண்டில் (592 CE)
கங்க அரசனோடு சேர்ந்து கங்க
அரசனின் 'மகன்' பொறுப்பு அதிகாரத்
தலைவன் பொன்னந்தி (பொன்+
நந்தி அல்லது அந்தி) என்பான்
பராவி நாடு கவர்ந்து தன்
நாட்டு எல்லையை விரித்த போது,
இதாவது, பெருமுகை மீது போர்
தொடுத்த அழித்த போது அந்த கங்க
அரசனுக்கு கட்டுப்பட்ட குறுநில
மன்னன் ஆராற்றூரை ஆண்ட
குன்றக்கண்ணி என்பான் வென்று வீர
சாவு எய்தியதன் நினைவாக நடப்பட்ட
கல் என்பது கல்வெட்டின் செய்தி.
பருமன் என்பது வேந்தன்
நிலை அதற்கு அடுத்த
நிலை அதியரைசன்அல்லது மன்னன்
நிலை. மன்னனுக்கு கீழே 'மக்கள்'
என்ற பொறுப்பு அதிகாரி. அதற்கும்
கீழ் உள்ள பதவி சேவகன் என்ற
படைத்தலைவன் நிலை. குன்றன்,
கண்ணன் என்ற
இரு வேறு பெயர்களின்
தொகுப்பு குன்றக்கண்ணி. இகர
ஈறு பெற்று கண்ணி என இப் பெயரில்
வழங்குகிறது.
கங்கனுக்கு கட்டுப்பட்டிருந்த குன்றக்
கண்ணி என்ன
காரணத்தினாலோ கங்கனுக்கு மாறுபட்டு நடந்ததால்
கங்கன் பகைக்கொண்டு அவன்
மீது போர் தொடுத்து அவனைக்
கொன்று உள்ளான்.
- - - -
சேலம் மாவட்டம்
கேது நாயக்கன்பட்டிப் புதூர்
சங்கிலிச்சி ஏரியில் இந்நடுகல்
உள்ளது. இதன் காலம் 6 - 7 ஆம்
நூற்றாண்டு என
இதனை கண்டுபிடித்து ஆய்வு செய்த
கல்வெட்டு அறிஞர் ச.
கிருஷ்ணமூர்த்தி தெரிவிக்கின்றார்.
இரண்டாவது நா / யனூர் நாடாளப்
பொன்னந் / தியார்
சேவகரு தாயனூராள் / வார் கொங்கிள
வரைசரு ம / க்கள் பொற்சாத்தனார்
நா /யனூர் மேல்வந்த ஞான்று /
எறிந்து தொறு மீட்டுப் / பட்டான்
வழுதியர் ம / (க)ன் பத்திரன் கல்
மகேந்திர வர்மன் காலப்
பொன்னந்தியாரின் பெயர் கொண்ட
இவர் வேற்றொருவர்.
கொங்கிளவரைசரான கங்க
இளநிலை மன்னனின் இரண்டாம்
ஆட்சி ஆண்டில் அவருடைய 'மகன்'
பொறுப்பு அதிகாரியாக இருந்த
தாயனூர் பகுதி ஆளும் குறுநில
மன்னன் பொற்சாத்தன் என்பவன்
நாயனூரைப் பொன்னந்தி என்பவன்
ஆண்டு கொண்டிருந்த வேளையில்
நாயனூர் மேல்
படையெடுத்து வந்து ஆநிரைகளைக்
கவர்ந்த போது பொன்னந்தியின்
படைத் தலைவன் வழுதி என்பானின்
மகன் அல்லது படைப்பிரிவு வீரன்
பத்திரன் அதை எதிர்த்துத்
தாக்கி வென்று அவ்
ஆநிரைகளை மீட்டு வீர
சாவடைந்தான். பத்திரன் நினைவில்
எழுந்த நடுகல் இது என்பதே செய்தி.
பொன் என்ற முன் அடை செல்வ
நிலையைக் குறிக்கும் பட்டம்
ஆகலாம். பல குறுநில மன்னர்
இப்பட்டம் கொண்டு இருந்தனர்
என்பது அறிஞர் கருத்து.
இது சமீன்தார் நிலையை ஒத்தது.
வழுதி என்ற பெயர் இவர் பாண்டிய
நாட்டினர் என்று உணர்த்துகிறது.
பத்திரம் என்பது ஒரு வகைப் படைக்
கருவி அதில் வல்லவர் பத்திரன் எனக்
கொள்ளலாம்.
- - - -
தருமபுரி மாவட்டம்
தருமபுரி வட்டத்து பலிஞ்சிரஹள்ளி (வல்
ஈஞ்சன் பள்ளி) எனும் ஊரில்
வட்டெழுத்து பொறிப்பு உள்ள நடுகல்
கல்வெட்டு (நடு. பக். 160) உள்ளது.
இதன் காலம் 6 ஆம் நூற்றாண்டு.
கோவிசைய மயீந்திர பருமற்கு யா /
ண்டைந்தாவது காடந்தைகள்
சேவகன் /
புதுப்பள்ளிகளோடு பொருத
ஞான்று ப / ட்டா னெருமெ / திகாரி
யாண்டு - ஆண்டு; சேவகன் -
படைத்தலைவன், மெய்க்காப்பாளன்;
பொருத - போர் செய்த; ஞான்று -
அக்கால்; பட்டான் - செத்து வீழ்ந்தான்
முதலாம் மகேந்திர வர்மப்
பல்லவனின் ஐந்தாம் ஆட்சி ஆண்டில்
(595 CE) அவனுக்கு அடங்கிய
சிற்றரசன் காடந்தை என்பானின்
படைத் தலைவன்
எருமெதிகாரி என்பான்
புதுப்பள்ளி என்பானுடன் போர்
செய்து வீர சாவடைந்தான்.
காடன், அந்தை ஆகிய
இரு பெயர்களின் ஒட்டுப் பெயர்
காடந்தை என்பது.
எருமை அதிகாரி என்பதே எருமெதிகாரி என
பொறிக்கப்பட்டு உள்ளது. இவன்
எருமைத் தொறுவுக்கு காவலனாய்
இருந்தவன்
என்பதை ஒருவாறு உய்த்துணரலாம்.
இது இவன் இயற்பெயரன்று.
அதிகாரி என்ற சொல்
தமிழுக்கு உரியது அது சமற்கிருதம்
அன்று. புதுப்பள்ளி என்ற ஊரைச்
சேர்ந்தவன் புதுப்பள்ளிகள் எனக்
கொள்ளலாம். பள்ளன் என்பது இகர
ஈறு பெற்று பள்ளி என்றும் வழங்க
இடமுண்டு.
- - - -
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம்
வட்டம் கருங்கலிப்பாடிபட்டி எனும்
ஊரில் அமைந்த நடுகல்
கல்வெட்டு (செங். நடு. 113 /1971)
வட்டெழுத்தில்
பொறிக்கப்பட்டு உள்ளது. இது 7 ஆம்
நூற்றாண்டுக் காலத்தது.
கோவியைய மசீந்திர / ம்
பருமற்கு பதின்னான் / காவது மீ /
வேண்ணா / ட்டு கருங் / காலிபாடி /
ஆள் கொற்ற / வாசிற் கருசா /
த்தனாரு மக / ன் கட்டங்க /
ன்னாரு பொற் / காடான்னாரு சே /
வகரு நரிபள் / ளி வீரவாண்ண /
ரையரு மக்கள் / பொன் பானன் /
னாரோடெறிந்து / பட்டாரு கல்.
எறிந்து - அழித்து, வென்று,
கொள்ளையிட்டு
முதலாம் மகேந்திர வர்மப்
பல்லவனின் பதினான்காம் (604 CE)
ஆட்சி ஆண்டில் மேல் வேணாட்டின்
ஒரு பகுதியான
கருங்காலிப்பாடியை ஆண்டு கொண்டுள்ள
மன்னன் கொற்றவாசி கருசாத்தன்
என்பானுடைய 'மகன்' அதிகாரப்
பொறுப்பு பெற்ற கட்டங்கன் என்பவன்
சிற்றரசன் பொற்காடான்
என்பானுடைய நரிப்பள்ளியைச் சேர்ந்த
படைத்தலைவன் வீரவாண் அரையன்
என்பவருடைய மகன் அல்லது வீரன்
பொன்பானன் என்பவனுடன்
போரிட்டு வென்று வீர சாவடைந்ததன்
நினைவாக கட்டங்கனுக்கு நட்டுவித்த
நடுகல்.
கொற்றவாயில்
என்பதே கொற்றவாசி என
வழங்கி உள்ளது. வீரவாண
அரையனும் பொன்பாணனும் வாண
அரச வழியினர் ஆகலாம்
என்பது அவர்தம் பெய்ரகளில் உள்ள
வாண், பாணன் ஆகிய பெயர்கள்
காட்டி நிற்கின்றன.
- - - -
தருமபுரி மாவட்ட
தருமபுரி வட்டத்து மாக்கனூரில்
வட்டெழுத்தில் பொறித்த நடுகல்
கல்வெட்டு உள்ளது. இதன் காலம் 7
ஆம் நூற்றாண்டு.
கோவிசைய மயீந்திர பருமற்கு ப /
தின் நால்காவாது பெரும்பாண அதிஅ /
ரைசருச் சிங்க பரும அதிஅரைசரு /
(எரி)ந்தஞான்று சிங்கபரும
அதிஅரைசரு சே / வகன் அச்சுர பாநில்
பட்டார்
எரிந்த ஞான்று - வென்ற போது;
அதிஅரைசரு - வேந்தனால்
ஒரு சிற்றரசனுக்கு வழங்கப்படும்
பதவி அல்லது பொறுப்பு
முதலாம் மகேந்திர வர்மப்
பல்லவனின் பதினான்காம்
ஆட்சி ஆண்டில் (604 CE)
அவனுக்கு அடங்கிய வாண அரசன்
பெரும்பாண அதியரசன் சிம்மவர்மன்
என்ற பெயர் கொண்ட அதியரசன்
நிலையில் இருந்த ஒரு குறுநில
மன்னனை வென்ற போரில்
போது சிம்ம வர்மனுடைய
படைத்தலைவன் அச்சுரபாணில் வீர
சாவு எய்தினான்.
அசீரிய நாட்டவர் தமிழ் மரபினர்
என்பது அறிஞர் கருத்து. அசீரியாவில்
அசூர் பாணிபால் 668 - 626 BCE
என்றொரு மன்னன் ஆட்சிபுரிந்தான்.
அவன் பெயரை ஒப்பதாக இந்த வீரன்
பெயர் உள்ளது. வ > ப
திரிபு.பாணி என்பது வாணி > வாணன்
என்பதன் மருஉ. அல்
ஈறு பண்டு தமிழில் வழங்கியது.
இங்கு அகரம் ஒழிந்து 'ல்' மட்டும்
குறிக்கப்பட்டு உள்ளது. இரணியல்
முட்டம் எனும் ஊர்ப் பெயரில் அல்
ஈறு உள்ளதை நோக்குக.
- - - -
விழுப்புரம் மாவட்ட சங்கராபுரம்
வட்டத்து காணங்காடு என்ற ஊரில்
வட்டெழுத்து பொறிப்பு உள்ள
இந்நடுகல் (நடு. பக். 168) உள்ளது.
இதன் காலம் 7 ஆம் நூற்றாண்டு.
கோவிசைம இந்தி / ரபருமற்கி பதி /
னைந்தாவது / மீ கொன் / றை நாட்ட /
ரைசரை / ய் யோட்டி / ன பூசல் /
லில்பட்டான் / மேலூர் ஆதன்
மீ - மேல், மேற்கு; ஓட்டின -
தோற்கடித்து விரட்டு; பூசல் -
சிறு போர்
முதலாம் மகேந்திர வர்மப்
பல்லவனின்
பதினைந்தாவது ஆட்சி ஆண்டில் (605
CE) அவனுக்கு அடங்கி மேல்
கொன்றை நாட்டை ஆண்ட
சிற்றரசனை பூசலில்
தோற்கடித்து விரட்டிய போரில்
மேலூர் ஆதன் என்பவன் வீர
சாவு எய்தினான். மேலூர் ஆதன்
எந்நாட்டினன் அவனுடைய அரசன்
பெயர் என்ன என்பது இக்கல்வெட்டில்
குறிப்பிடப்படவில்லை.
மகேந்திரன் என்பது ம + இந்திரன் என
பிரித்துக் காட்டப்பட்டு உள்ளது.
பருமற்கு என்பது பருமற்கி என
தவறாக எழுதப்பட்டு உள்ளது. மேல்
கொன்றை நாட்டரசன் பெயர்
கல்வெட்டில் குறிக்கப்படவில்லை.

No comments:

Post a Comment