Total Pageviews

Sunday 22 April 2012

தஞ்சை கோவில்-2

விமானத்தினுள்ளே உயிர் ஓவியங்கள்
உள்ளன. சட்டை அணிந்த தளபதிகள்,
பூணூல் அணிந்த அந்தணர்கள்,
இடுப்பில் பாவாடையும், மேல்
போர்வையும் அணிந்த அரசிகள்,
இடதுபக்க பெரிய கொண்டையோடு,
தாடியோடு மாமன்னர் ராஜராஜன்,
அலங்காரமான, மிக அழகான கறுப்பு,
சிவப்பு, மாநிறம் கொண்ட
தேவரடியார்கள் என்று அழைக்கப்பட்ட
நடனமாதர்கள், சிதம்பரம் கோவில்
நடராஜர், விதவிதமான முகங்கள்;
ஒன்று போல் ஒன்று இல்லை. உயிர்
ததும்பும் முகபாவங்கள்.
தட்டை ஓவியங்கள். ஆனால்,
தெளிவாகத் தெரியும் ஒரு உலகம்.
மாமன்னர் ராஜராஜனைக் கோவில்
கட்டத் தூண்டியது எது.
போரா கலைஞர்கள் செய்திறனா.
இல்லை. பெரிய புராணம் என்ற
திருத்தொண்டர் புராணம் முக்கிய
தூண்டுதல். கோபுர வாசலில் உள்ள
சுவர்களில், சிறிய சிறிய சிற்பங்கள்
தெரிகின்றன. கண்ணப்ப நாயனார்,
பூசலார், கண்டேஸ்வரர் மன்மத
தகனம் என்று, முக்கால் அடி உயர
பதுமைகளைச்
செதுக்கி வித்தை காட்டியிருக்கின்றனர்.
அடுத்த விநாடி குழந்தை பிறக்கும்
என்ற தாயின் உருவம், மன்னர்
முகங்கள், புராண காட்சிகள் எல்லாம்,
கோவில் கோபுரங்களில் உண்டு.
இது என்னவித கோவில் - விமானம்
உயரம். மிக உயரம். கோபுரங்கள்
சிறியவை. இது ஆகம விதியா. புதிய
சிற்ப சாஸ்திரமா.
உள்ளே நுழைந்ததும்
நந்தியை மனதால் அகற்றிவிடுங்கள்.
எதிரே உள்ள விமானம் தான்
சிவலிங்கம். வானம் ஒரு சிவலிங்கம்.
விமானத்திற்குள் உள்ள
வெளி ஒரு சிவலிங்கம்.
வெளிக்கு நடுவே கருவறையில்
கருங்கல் சிவலிங்கம். எல்லாம்
சிவமயம். இந்த
விமானத்திற்கு மாமன்னர் ராஜராஜன்
வைத்த பெயர், "தென்திசை மேரு!'
உள்ளே கடவுள் பெயர் பிரகதீஸ்வரர்.
தமிழில் பெரு உடையார்.
வடக்கே உள்ள கைலாயத்தின்
மீது காதல். கைலாயம் போகவில்லை.
கைலாயத்தை இங்கே கொண்டுவந்துவிட்ட
உடையார் பெரிய உடையார்,
இது போதுமா கடவுளைச் சொல்ல.
ரொம்ப பெரிசு ஐயா கடவுள்.
கருவறைக்கு அருகே உள்ள
துவாரபாலகர் கட்டுகிறார்.
பதினேழு அடி உயரம். அவர் கால்,
கதை, கதையைச்
சுற்றி மலைப்பாம்பு.
மலைப்பாம்பு வாயில் பெரிய யானை.
அதாவது, யானையை விழுங்கும்
பாம்பு. பாம்பு சுற்றிய கதை.
கதையில் கால் வைத்த துவாரபாலகர்,
அவர் கை விஸ்மயம் என்ற
முத்திரை காட்டுகிறது.
உள்ளே இருப்பதை விவரிக்க
முடியாது என்று கை விரிக்கிறது.
விவரிக்கவே முடியாத சக்திக்கு,
கடவுளுக்கு, தன்னாலான
அடையாளம் காட்டியிருக்கிறார்
மாமன்னர் ராஜராஜன்.
அதுவே பிரகதீஸ்வரம். அதுவும்
விஸ்வரூபம், இன்றளவும்.

No comments:

Post a Comment