Total Pageviews

Monday 7 May 2012

இசை

இசை உயிர்களை இசைய வைப்பது.
இசைக்குள் எல்லா உயிர்களும்
அடங்கும். இசைமருத்துவம்
என்னும்
துறை இன்று வளர்ந்து வரும்
துறைகளுள் ஒன்றாகும். இசையால்
இரத்த அழுத்தம் முதல் நரம்பியல்
தொடர்பான நோய்கள்கூட
குணமாகின்றன என்று இன்றைய
அறிவியல் உரைக்கிறது.
நியூரான்களின் தொகுப்பே மூளை.
இசையால் உண்டாகும்
மின்னலைகள் உடலில் உள்ள
உயிர்வேதி மின்னலைகளுடன்
ஒத்துப்போகின்றன. அதனால்
உடலில் பல மாற்றங்கள்
உருவாகின்றன. இந்த
மாற்றத்தையே நாம் இசைதல்
என்கிறோம்.
சங்ககால இசையறிவு
சங்ககால மக்கள் இசைத்துறையில்
நன்கு தேர்ச்சி பெற்றிருந்தனர்.
குறிஞ்சிப்பண், பாலைப்பண்,
மருதப்பண், படுமலைப்பண்,
விளரிப்பண், காமரப்பண், ஆம்பல்
பண் எனப் பல்வேறு பண்களையும்
காலை, மாலை எனப்
பொழுதறிந்து இசைத்து மகிழ்ந்தனர்.
நரம்பு, துளை, தோல,; கஞ்சம் என
நான்கு வகையான
இசைக்கருவிகளோடு குரலாலும்
இசைத்து மகிழ்ந்தனர்.
இசைக்கு மயங்கும் உயிர்கள்
சங்க இலக்கியங்களின்
வழி புள்ளினங்கள், விலங்கினங்கள்
இசைக்கு மயங்கிய
தன்மைகளையும் புலவர்கள்
குறிப்பிட்டுள்ளனர்..
யானை யாழோசைக்குக்
கட்டுப்பட்டதை,
‘காழ்வரை நில்லாக்
கடுங்களிற்று ஒருத்தல்
யாழ்வரைத்
தாங்கியாங்கு’ (கலித்தொகை-2-26-
27)
யானைப் பாகனின்
குத்துக்கோலுக்கு அடங்காத
யானைகூட யாழின் இனிமையான
இசைக்கு மயங்கியமை
புலப்படுத்தப்படுகிறது.
செந்நாய்க்கு அஞ்சிய கலைமான்
இன்னிசை கேட்டு அச்சம்
நீங்கியதை,
‘ செந்நாய் வெரீஇ
புகர்உழை ஒருத்தல்
போரி அரை விளவின் புண்புற
விளை பூசல்
அழல் எறி கோடை தூக்கலின்
கோவலர்
குழல் என நினையும் நீர் இல்
நீர்இடை’ அகநானூறு-219-13-16
இவ்வடிகள் உணர்த்தும்.
செந்நாய்க்கு அஞ்சிய கலைமான்,
விளாம்பழ ஓட்டின்
துளை வழியே வரும் வெப்பமான
காற்று இனிய
ஓசையோடு வருவதைக் கேட்கிறது.
அவ்வோகை கோவலரின்
குழலோசை என்றே கருதுகிறது.
அதனால் அச்சம் நீங்குகிறது என்பர்
கயமனார்.
இசையின் இனிமையில் மயங்கிய
கிளிகளைப்பற்றி,
‘படுகிளி கடியும் கொடிச்சி கைக்
குளிரே
இசையின் இசையா இன்பாணித்தே
கிளி அவள்விளி என விழல் ஓவாவே
அது புலந்து அழுத கண்ணே.’
குறுந்தொகை-291-2-4
இப்பாடல் சுட்டுகிறது. தினைகளில்
விழும் கிளிகளை விரட்டச்சென்றாள்
ஒரு தலைவி. குளிர் என்னும்
இசைக்கருவியால்
இசைத்து ஒலி எழுப்பினாள்.
அங்கு வந்த கிளிகளோ குளிர்
என்னும் இசைக்கு மயங்கின.
தலைவியின் குரலைத் தம் இனத்தின்
குரலே என்று எண்ணிய கிளிகள்
வேறிடம்
செல்லாது அங்கேயே தங்கின.
அதனால் வருந்திய
தலைவி அழுதனள்
இதையே இப்பாடலடிகள்
சுட்டுகின்றன. இப்பாடலில்
இசைக்கு கிளிகள்
மயங்கியமை குறிப்பிடப்பட்டுள்ளது.
அசுணமா என்னும்
உயிரியை யாழிசைத்து
வரவழைப்பதையும் பின் அதனைப்
பறையறைந்து கொன்றதையும்
புலவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
ஐந்தறிவு உயிரினங்களையே
மயக்கும் இசை ஆறறிவு படைத்த
மனிதனை மேலும் மயக்குவதாக
இருந்தது. மனிதன் தான் விரும்பிய
இசையை மீண்டும் மீண்டும்
இசைத்து மகிழ்ந்தான்.
கொடிய மனம் கொண்ட
ஆறலைக்கள்வரையும் மயக்கும்
தன்மை இசைக்கு இருந்தது என்பதை
“ஆறலைக் கள்வர் படைவிட
அருளின்
மாறுதலை பெயர்க்கும் மருவு இன்
பாலை (பொருநர்-21-22)
என்பர் முடத்தாமக்கண்ணியார்.
புறவாழ்வில் போரில்
இசை பெரும்பங்கு வகித்தது.
போரின் தொடக்கத்தையும்
முடிவையும்
அறிவிப்பதே இசையாக இருந்தது.
போரில் எந்த நாட்டு மன்னன்
வெற்றிபெறுகிறான் என்பதைத்
தெரியப்படுத்துவது இசையே.
வென்ற மன்னன் தோற்ற மன்னனின்
முரசைக் கிழிப்பதை மரபாகக்
கொண்டிருந்தான்.அரண்மனையில்
முரசுகட்டில் இருந்தது.
போரில் முழங்கும் முரசு வீரர்களின்
மனதில் ஊக்கத்தை அளிப்பதாக
இருந்தது. சான்றாக,
“ பொதுவில் தூங்கும்
விசியுறு தண்ணுமை
வளிபொரு தெண்கண் கேட்பின்
அது போர் என்னும் என்ஐயும்
உளனே’ புறநானூறு-89-7-9
இவ்வடிகளில் காற்றின் காரணமாக
ஒலியெழுப்பியது தண்ணுமை.
அவ்வொலி போரின்
அறிவிப்பொலியே என்று
ஐயம்கொண்ட வீரனின்
நிலை சுட்டப்பட்டுள்ளது.
இதனால் இசை அக்காலத்தில் எந்த
அளவுக்கு மனதில் ஊக்கத்தையும்
சிந்தனையையும் தூண்டுவதாக
அமைகிறது என்பது புலனாகும்.
சங்க இலக்கிய இசை மருத்துவக்
கூறுகள்.
சங்கப் பாடல்கள் சுட்டும் பல
கருத்துக்கள் இன்றைய
இசைமருத்துவம் சுட்டும்
கூறுகளுடன் ஒத்துப்போகின்றன.
இதனை
“தீம்கனி இரவமொடு வேம்பு மனை
செரீ
வாங்கு மருப்பு யாழொடு பல் இயம்
கறங்க
இசைமணியெறிந்து காஞ்சிபாடி“
புறநானூறு-281-1-5
இப்பாடலில் போரில் புண்பட்ட
வீரனின் புண்னை ஆற்றவும் அவன்
வலியின்றி இருக்கவும் காஞ்சிப்பண்
பாடியமை சுட்டப்படுகிறது.
இசை வலியைக் குறைக்கும் என்ற
அறிவு அன்றைய
மக்களுக்கு இருந்தமை இதனால்
அறியலாம் . இதனை மேலும்
ஒரு சான்று வாயிலாகவும்
அறியமுடிகிறது.
“ கொடுவரி பாய்ந்தெனக் கொழுநர்
மார்பில்
நெடுவசி விழுப்புண் தணிமார்க்
காப்பென
அறல்வாழ் கூந்தல் கொடிச்சியர்
பாடல்’ மலைபடுகடாம்-302-304.
இவற்றால் உடலில் ஏற்பட்ட
வலி குறைய பழந்தமிழர்கள்
இசையை மருந்தாகப்
பயன்படுத்தியமை புலனாகிறது.
வள்ளைப்பாட்டு
குறமகளிர் தினை குற்றும்
போது பாடும் பாடல்
வள்ளைப்பாட்டு ஆகும்.
இதனை,
தினைகுறு மகளிர்
இசைபடு வள்ளை (மலைபடுகடாம்-
343)
பாவடி உரல
பகுவாய்வள்ளை (குறுந்தொகை-89-
1)
ஆகிய அடிகள் உணர்த்தும்.
வள்ளைப்பாட்டு என்பது மகளிரின்
மன அழுத்தம் நீக்கும்
ஒருவகையான
இசைமருத்துவமாகவே
அறியமுடிகிறது.
வெறியாட்டு
தலைவியின்
உடல்வேறுபாடு கண்டு
நிகழ்த்தப்படும்
வெறியாட்டு ஒரு வகையான
இசைமருத்துவமாகவே அன்று
நிகழ்த்தப்பட்டிருக்கிறது. இதனை,
‘கூடுகொள் இன்னியம் கறங்க
ஆடுஅணி அயர்ந்த அகன்
பெரும்பந்தர்
வெண்போழ்
கடம்பொடு சூடி இன்சீர்
ஐது அமை பாணிஇரீஇ’ (அகநானூறு
-98-14-17)
‘அருங்கடி வேலன்
முரகொடு வளைஇ
அரிக்கூட்டு இன்னியம்
கறங்க’ (மதுரைக்காஞ்சி611-612)
இவ்வடிகள் வழியாக வெறியாட்டில்
இசை மைய ஆற்றலாக
விளங்கியமை உணர்த்தப்படுகிறது.
தன்னைப் பற்றி ஊரார் பேசும்
அலரால் ஏற்பட்ட மன
அழுத்தமே தலைவியின்
உடல்வேறுபாட்டுக்கு அடிப்படைக்
காரணமாகும்.இசை இந்த
மனஅழுத்தத்தைப் போக்குவதாக
அமைகிறது
நிறைவுரை..
• மக்களுக்கு வரும்
நோய்களை உடல் தொடர்பானவை,
மனம் தொடர்பானவை என
இருநிலைகளில் பகுக்கலாம். மனம்
தொடர்பான நோய்கள் மன அழுத்தம்
காரணமாகவே தோன்றுகின்றன.
உடல் தொடர்பான நோய்கள்
பலவிதங்களில் வருகின்றன.

இசை இவ்விருவகை நோய்களுக்கும்
தக்க மருந்தாக அமைகிறது. மன
அழுத்தம் நீங்கி மனதைத்
தன்வயமாக்கும் ஆற்றல்
கொண்டதாக
இவ்விசை விளங்குகிறது.
• இசை உடலில் உள்ள
உயிர்வேதி மின்லைகளோடு
ஒத்துப்போவதால்
புத்துணர்வளிப்பதாகவும்
இசை அமைகிறது.
இதனை இன்றைய
மருத்துவவியலார்
நன்கு உணர்ந்துள்ளனர்.
மேலை நாடுகளில் மிகவும்
புகழ்பெற்றதாக இந்த
இசை மருத்துவ
முறை விளங்குகிறது.
சங்ககாலத்திலேயே இசையின்
தன்மையை உணர்ந்து
சங்ககாலமக்கள்
பயனறிந்து இசைத்து மகிழ்ந்தமை
இலக்கியங்கள் வழி அறியும்
போது வியப்பாக உள்ளது.
• பாகனுக்கு அடங்காத
யானை யாழிசைக்கு
அடங்கியதையும்,
• கிளிகள்
யாழிசைக்கு மயங்கியதையும்,
• அசுணமாவை யாழிசைத்து
வரவழைப்பதையும்
பறையறைந்து கொல்வதையும்,
சங்கப்பாடல்கள் சுட்டுகின்றன.
• கொடிய மனம் கொண்ட
ஆறலைக்கள்வரையும்
இசையவைக்கும்
தன்மை இசைக்கு இருந்தது என்ற
சங்ககால மக்களின்
இசையறிவு இசையின்
பயனை அவர்கள்
நன்கு அறிந்திருந்தனர்
என்பதையே உணர்த்துகின்றது.
• போரில் புண்பட்டவர்களுக்கும்.
வேட்டையாடி
புண்பட்டவர்களுக்கும்
இசை இசைத்து அவர்களின்
வலிபோக்க எண்ணியமை பாடல்கள்
வழி அறிகிறோம்.
இசை காயத்தை ஆற்றும்,
வலியைக்குறைக்கும் என்ற
அவர்களின் இசைமருத்துவ
அறிவு எண்ணி இன்புறத்தக்கது.
• வெறியாட்டு,
வள்ளைப்பாட்டு ஆகிய இரண்டும்
சங்க காலப் பெண்டிரின் மன
அழுத்தம் நீக்கும் அடிப்படைக்
காரணியாகத்
திகழ்ந்தமை சங்கப்பாடல்கள்
வழி அறிகிறோம்.
இவ்விரு நிகழ்வுகளிலும்
இசை மைய ஆற்றலாக
விளங்குகிறது.
சங்க கால மக்கள் இசையின்
பயனை நன்கு அறிந்திருந்தனர்.
அதனை தம் வாழ்வில் ஒரு கூறாக
போற்றினர் என்பதற்கு சங்க
இலக்கியங்களே சான்றாக உள்ளன.
மனிதர்கள்
மட்டுமன்றி விலங்கினங்கள்,
புள்ளினங்கள் கூட
இசைக்கு மயங்கும் என்ற
குறிப்புகள் வழி அக்கால மக்களின்
இசைநுகர்ச்சியை அறியலாம்.
இசை நோயைக் குணப்படுத்தும்,
வலியைக் குறைக்கும் என்ற
அவர்களின் சிந்தனை அவர்களின்
இசைமருத்துவ
அறிவை உணர்த்துவதாகவே உள்ளது

No comments:

Post a Comment