Total Pageviews

Monday 7 May 2012

எறும்பு

(மூங்கிலின் இருபுறமும்
தீப்பற்றிக்கொண்டபோது அதன்
இடையில் சிக்கிக்கொண்ட எறும்பு)
“இருதலைக் கொள்ளியின் உள்
எறும்பு.”
இவ்வரிகளை,
முதல்
முறை படித்போது கவிதை நயம்
உணர்ந்தேன்..
இரண்டாம் முறை படித்த
போது உவமை நயம் உணர்ந்தேன்..
மூன்றாம் முறை படித்த
போது எறும்பின் வலி உணர்ந்தேன்...
நான்காம் முறை படித்த
போது எறும்பைப் போன்ற
தலைமக்களின்
மனவலியை உணர்ந்தேன்....
இப்போது எனக்கு ஒரு ஐயம்
எழுகிறது..
எறும்பின் வலி முதல் முறை படித்த
போது ஏன் என்னால் உணர
முடியவில்லை..?
‘பூனை எலியை விரட்டுகிறது,
இரண்டும் ஓடுகின்றன..
இரண்டும் ஓட்டம் தான் ஆனால்
இரு ஓட்டத்துக்கும்
வேறுபாடு உண்டு.
பூனை பசிக்காக ஓடுகிறது...
எலி உயிர் காக்க ஓடுகிறது....
பூனை பசிக்காக ஓடுவது போல
நாம் பணத்துக்காக ஓடுகிறோம்.
கூட்டத்தோடு கூட்டமாக நானும்
ஓடுகிறேன்...
அதனால் நானும்
உணர்வுகளை இழந்து எந்திரமாக
மாறிவிட்டேனோ என்பதே என்
ஐயம்..
ஆம்...
நாளிதழில் கோர விபத்துக்களைப்
படித்துக்கொண்டே என்னால்
காபி அருந்தமுடிகிறது.....
தொலைக்காட்சியில்
சுனாமியையும், தீ
விபத்துக்களையும்
பார்த்துக்கொண்டே என்னால்
சாப்பிடமுடிகிறது.....
சாலையில் அடிபட்டுகிடப்பவரைப்
பார்த்துக்கொண்டே அவருக்கு உதவி
ஏதும் செய்யாமல் என்னால்
போகமுடிகிறது.....
எனப் பலவாறு எண்ணி....
நான் எந்திரம் தான்
என்று முடிவுக்கு வருமுன்பு.....
இருதலைக்கொள்ளியில் சிக்கிய
எறும்பு என்னிடம் பேச
ஆரம்பித்தது.
எறும்பு – காலம்
கடந்தாவது வலியைப்
புரிந்து கொண்டாயே....
உனக்குள் இன்னும் மனிதம்
உயிருடன் தான் உள்ளது என்று....
பாடல் – 1.
முத்தொள்ளாயிரம்.
நாண் ஒருபால் வாங்க நலன்
ஒருபால் உள்நெகிழ்ப்பக்
காமரு தோள் கிள்ளிக்கு என்
கண்கவற்ற யாமத்து
இருதலைக் கொள்ளியின் உள்
எறும்பு போலத்
திரிதரும் பேரும் என் நெஞ்சு.
முத்தொள்ளாயிரத்தில்
இடம்பெற்றுள்ள இப்பாடலில்,
தலைவியின்
மனநிலைக்கு எறும்பின்
மனநிலை ஒப்புமை
காட்டப்படுகிறது.
தலைவன் வீதியில் வலம்
வருகிறானாம்...
தலைவிக்கு அவனைப் பார்க்க
வேண்டும் என்னும் ஆசை..
போ...!போ....! சென்று பார்
என்று ஒரு மனம் சொல்கிறது....
கூடாது ! சென்று பார்க்கக்
கூடாது அது பெண்மைக்கு அழகல்ல
....
என்று நாணம் ஒருபக்கம்
தடுக்கிறது..........
தலைவியின் இம்மனநிலையை....
மூங்கிலின் இருபுறமும்
தீப்பற்றிக்கொள்ள அதன்
இடையே அகப்பட்ட எறும்பின்
மனநிலையோடு ஆசிரியர்
ஒப்பிட்டுச்செல்கிறார்....
இப்பாடலைப்
படித்து முடித்துவிட்டு,
என்ன! உவமை,!
எத்தகு உயிர் வலி!
மெய்சிலிர்த்து நிற்கிறேன்..........
தீக்குள் அகப்பட்ட
எறும்பு வந்து என்னிடம்
சொல்கிறது........
என்னை முதலில்
பாடியது முத்தொள்ளாயிரம்
இல்லை.
சங்க இலக்கியத்தில் அகநானூறு...
ஆம் இங்கு தலைவியின்
மனநிலைக்கு என்னை ஒப்புமை
சொன்னது போல அகநானூற்றில்
தலைவனின் மனநிலைக்கு என்னை
ஒப்புமைப்படுத்தியிருக்கிறார்கள்
என்றது...
பெருமகிழ்ச்சியோடு அகநானூற்றுப்
பாடலைப் பார்க்கிறேன்...
பாடல் – 2.
வீங்கு விசை, பிணித்த விரை பரி,
நெடுந் தேர்
நோன் கதிர் சுமந்த ஆழி ஆழ்
மருங்கில்,
பாம்பு என முடுகுநீர் ஓட, கூம்பிப்
பற்று விடு விரலின் பயறு காய்
ஊழ்ப்ப,
5 அற்சிரம் நின்றன்றால், பொழுதே;
முற்பட
ஆள்வினைக்கு எழுந்த அசைவு இல்
உள்ளத்து
ஆண்மை வாங்க, காமம் தட்ப,
கவை படு நெஞ்சம்! கண்கண்
அகைய,
இரு தலைக்
கொள்ளி இடை நின்று வருந்தி,
10 ஒரு தலைப் படாஅ
உறவி போன்றனம்;
நோம்கொல்? அளியள்
தானே யாக்கைக்கு
உயிர் இயைந்தன்ன நட்பின், அவ்
உயிர்
வாழ்தல் அன்ன காதல்,
சாதல் அன்ன பிரிவு அரியோளே!
நரை முடி நெட்டையார்
(அகநாநூறு – 339) பாலை.
“ போகா நின்ற தலைமகன் தன்
நெஞ்சிற்குச் சொல்லியது“ 339
பொருள் ஈட்டி வர வேண்டித்
தலைவன் தலைவியைப்
பிரிந்து செல்கிறான் , சென்றவன்
இடைவழியில் அவளுடைய உயர்ந்த
பண்புகளை எண்ணித் தன்
நெஞ்சிடம் சொல்வதாக இப்பாடல்
அமைகிறது.“
விரைந்தோடும் குதிரைகளைக்
கொண்டது தேர்....
அதன் சக்கரங்கள் பதிந்து செல்லும்
சுவட்டில் மழை நீர் ஓடுகிறது..
சக்கரங்களின் சுவட்டில் மழை நீர்
ஓடுவது பாம்பு விரைந்தோடுவது
போலவே இருக்கிறது.
குவிந்து ஒன்றோடொன்று
தொடர்பற்ற விரல்களைப் போல
பயிற்றங்காய்கள்
விரிந்து முதிர்ந்தன..
இவ்வாறாகப் பனிப்பருவம்
தோன்றியது...
ஒருபக்கம்...............
முயன்று பொருள் தேடவேண்டும்....
என்று தளர்வில்லாத
ஆண்மை முன்னே இழுக்கிறது...
மறுபக்கம்.............
தலைவி மீது நான் கொண்ட காமம்
பின்னே இழுக்கிறது....
அதனால் இருபாற்பட்ட
நெஞ்சையுடைய நான்..........
இருபுறமும் கணுக்களில் தீப்பற்றிக்
கொண்ட எறும்பு ஒருபுறமும்
செல்ல இயலாது....
உள்ளேயே இருந்து வருந்துவது
போல வருந்தி நிற்கிறேன்....
உடம்பும் உயிரும் சேர்ந்தால் தான்
காதல்...
உடலை விட்டு உயிர் பிரிந்தால்
சாதல்....
நானும் தலைவியும் உடம்பும்
உயிரும் போல.....
இப்போது பிரிந்திருக்கிறோம்........
எனக்கு உயிர் இருக்கிறதா..........?
பாவம் தலைவி என்னைப் போலத்
தானே அவளும் எண்ணுவாள்
என்று புலம்புகிறான்
தலைவன்..............
இருதலைக் கொள்ளியின் உள்
எறும்பு.
என்னும் ஒரு உவமை அகநானூறு,
முத்தொள்ளாயிரம் என்னும்
இரு நூல்களிலும் ஆளப்பட்டுள்ளது.
அகநானூற்றில் தலைவனின்
மனநிலைக்கும்,
முத்தொள்ளாயிரத்தில் தலைவியின்
மனநிலைக்கும்
உவமையாக
எடுத்தாளப்பட்டுள்ளது....
மெல்ல மெல்ல
உணர்வுகளை இழந்து எந்திரங்களாக
மாறிவரும் சமூகத்துக்கு உயிரின்
வலியையும், உணர்வுகளின்
சுமையையும் எடுத்தியம்பிவதாக
இவ்வுவமை அமைகிறது என்றால்
அது மிகையல்ல..

No comments:

Post a Comment